Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 30, 2019

ஒன்றிய அளவில் 40 பள்ளிகள் தேர்வு செய்யப்படும் பள்ளிகளில் அக்.3 முதல் புற மதிப்பீட்டு குழு ஆய்வு : 39 வகையான பதிவேடுகளை பார்வையிடுகின்றனர்

தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி இரண்டு மாத காலத்திற்கு புற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்தவும், புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் புற மதிப்பீடு செய்யப்படுகிறது. கடந்த 2016 - 2017 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டிலும் இது நடத்தப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டிலும் தேசிய திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் புறமதிப்பீடு செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் உட்பட மூன்று பேர் கொண்ட குழு வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை பள்ளிகளில் ஆய்வு செய்ய உள்ளது. ஒவ்வொரு ஒன்றிய அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அடங்கிய 40 பள்ளிகள் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த புற மதிப்பீட்டு குழு பள்ளி முன்னேற்ற சுய மதிப்பீட்டு படிவத்தில் கடந்த 2016-17, 2018-19ம் ஆண்டு விபரங்களை ஒப்பீடு செய்து அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்ய உள்ளது. பள்ளியில் காணப்படும் குறைகளை விமர்சிக்க கூடாது, அதே வேளையில் ஆலோசனைகளை வழங்கி முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பதிவேடு மற்றும் சான்றுகளை மட்டும் பார்க்காமல் வகுப்பறைகளை நேரில் ஆய்வு செய்தும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கலந்துரையாடவும், பள்ளி வளாகத்தை பார்வையிட்டு சுய மதிப்பீடு படிவத்தில் உண்மைத்தன்மையை அறிய வேண்டும். பள்ளி இருப்பு பதிவேடு, நூலகம், ஆய்வகம், கணினிகள், துப்புரவு பணியாளர், மாணவர் சேர்க்கை, மெல்ல கற்கும் மாணவர்கள், இலவச பொருட்கள் வழங்கல் உட்பட 39 வகையான பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குழுவிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.