Join THAMIZHKADAL WhatsApp Groups

வாகனங்களில் செல்பவர்கள் இனி அது தொடர்பான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பதிலாக, mParivahan அல்லது DigiLocker ஆகிய செயலிகள் மூலம் குறிப்பிட்ட ஆவணங்களை போக்குவரத்து போலீஸாரிடம் காண்பிக்க வேண்டும்.
மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புக் உள்ளிட்ட ஆவணங்களின்றி பயணிப்போருக்கான அபராதமும் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பல லட்சம் ரூபாய் அபராதமாக வசூலாகியுள்ளது.
இந்த நிலையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, mParivahan அல்லது DigiLocker ஆகிய செயலிகள் மூலம் ஆவணங்களை போக்குவரத்து போலீஸாரிடம் காண்பிக்க முடியும்.
முக்கிய வாகன ஆவணங்களை இந்த செயலிகள் மூலம் போக்குவரத்து போலீஸார் செக் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை, இந்த செயலிகள் கொண்ட ஸ்மார்ட் போன் ஒருவரிடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கவலைப்பட வேண்டாம். விசாரிக்கும் போலீஸாரே தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போனில் இந்த செயலிகள் மூலம் குறிப்பிட்ட ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இதைத்தான் தற்போது வெளியிட்டுள்ள மத்திய அரசின் சுற்றறிக்கை கூறியுள்ளது.