Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 2, 2019

தினம் ஒரு திருக்குறள் - குறள் எண் 03




பால்: அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

குறள்: 03


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார் (குறள் எண் : 03)

மனமாகிய மலரில் அமர்ந்திருக்கும், இறைவனை நினைத்து அவன் பாத மலரினைத் தொழுபவர்கள். இந்த உலகில் நீண்ட நெடுங்காலமாக வாழ்வார்கள்.

மலர்மிசை ஏகினான் – மலரின்கண் வீற்றிருப்பவன்.

மலர் என்பது - மென்மையானது, தூய்மையானது. இவ்வாறு மென்மையான, தூய்மையான மனம் கொண்டவர் உள்ளத்தில்தான் இறைவன் வாழ்வான்.

இத்தகைய மென்மையான, தூய்மையான மனம் கொண்டவர்கள் யாருக்கும் எந்தத் துன்பங்களையும் செய்யமாட்டார்கள்

அவ்வாறு துன்பங்கள் செய்யாத மனிதரை இந்த உலகம் எப்பொழுதும் நினைத்திருக்கும். ஆகவேதான் நிலமிசை நீடு வாழ்வார் எனக் கூறுகிறார் திருவள்ளுவர்.

மாணடி – என்ற சொல்லின் பொருள் மாட்சிமை பொருந்திய அடி என்பதாகும். அதாவது, புகழுடைய பாதம். இறைவன் பாதத்தைத் தவிர வேறு எவருடைய பாதமும் புகழுடையது அன்று.

நீடுவாழ்தல் என்பது – ஒருவர் உயிரோடு இருக்கும்போது மட்டுமன்றி, இந்த மண்ணுலகைவிட்டுப் பிரிந்த போதும் அவரது புகழ் இந்த மண்ணுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதேயாகும்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

என்பதன் பொருள், “தூய்மையான, மென்மையான மலர் போன்றவர் உள்ளத்தில் வாழும் கடவுளரின் புகழ்மிக்க திருப்பாதங்களைத் தொழுபவர்கள், வாழ்கின்ற காலத்தில் மட்டுமல்லாமல் வாழ்ந்த பிறகும் அவர்களது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்” என்பதேயாகும்.