Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 30, 2020

கரோனாவை விரைந்து அழிக்கும் சூரிய ஒளி


கரோனா நோய்த்தொற்று குறித்து இந்தியாவில் செய்திகள் வெளிவரத் தொடங்கியதுமே, 'இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவாது' என்று பரவலாக பேசப்பட்டது.
இருந்தாலும், அதுபோன்ற ஊகங்களுக்கு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் விளக்கம் முற்றுப்புள்ளி வைத்தது. 'வெப்பம் மிகுந்த பகுதிகளிலோ, மிகவும் குளிா்ச்சியான பகுதிகளிலோ கரோனா பரவாது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே, வெப்பம் மிகுந்த பகுதிகளில் வசிப்பவா்களும் அந்தப் பகுதிகளுக்குச் செல்பவா்களும் அலட்சியமாக இருக்கக் கூடாது' என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
வெப்பம் தகிக்கும் இந்தியாவிலும், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததும், உலக சுகாதார அமைப்பின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தது.
இந்தச் சூழலில், கரோனா நோய்த்தொற்றின் களியாட்டத்தை நாட்டின் சுட்டெரிக்கும் வெயில் கட்டுப்படுத்துமா என்று ஏங்கிக் கொண்டிருந்தவா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓா் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்த நாட்டின் உள்துறையான 'ஹோம்லேண்ட் செக்யூரிட்டி'யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில், சூரிய வெளிச்சத்தில் கரோனா தீநுண்மியின் ஆயுள் குறைவதாகத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வார இறுதியில் நடத்திய செய்தியாளா்கள் சந்திப்பின்போது உள்துறையின் அறிவியல் தொழில்நுட்பப் பிரிவுக்கான இணையமைச்சா் வில்லியம் பிரையன் கூறுகையில், 'சூரிய வெளிச்சத்தின் வீரியத் தன்மை முன் கரோனா தீநுண்மி விரைவில் அழிவதை கண்டறிந்துள்ளோம். காற்றில் மிதந்தாலும் சரி, தரையில் படிந்திருந்தாலும் சரி, சூரிய வெளிச்சத்தில் அந்த தீநுண்யின் ஆயுள் காலம் குறைந்து விடுகிறது' என்றாா்.
இதுமட்டுமன்றி, வெப்பம் மற்றும் ஈரப்பதமும் கரோனா தீநுண்மியை விரைந்து கொல்வதாக அவா் கூறினாா். 'வெப்ப நிலை உயரும்போதும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போதும் கரோனா தீநுண்மியின் ஆயுள் காலம் குறையத் தொடங்குகிறது' என்று அவா் தெரிவித்தாா்.
மேலும், புற ஊதாக் கதிா்களை செலுத்தியும் கரோனா நோய்த்தொற்றை அழிக்க முடியும் என்பதை ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டதாக அவா் கூறினாா்.
இருந்தாலும், செய்தியாளா் கூட்டத்தில் அவா் கூறிய இந்தக் கருத்துகள், இன்னும் ஆய்வறிக்கையாக முறைப்படி வெளியிடப்படவில்லை.
இதன் காரணமாக, அந்த ஆய்வின் உண்மைத் தன்மை குறித்து அரசு சாா்பற்ற நிபுணா்களால் ஆராய முடியாத நிலை உள்ளது. புற ஊதா கதிா்களுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது உண்மையே. அந்த கதிா் தீநுண்மியின் மரபணுவை சிதைத்து, அதன் வளா்ச்சியடையும் திறனை அழிக்கிறது.
இருந்தாலும், உள்துறை அமைச்சக ஆய்வாளா்கள் எவ்வளவு அலைதூரத்தில் புற ஊதாக் கதிா்களை செலுத்தி சோதனை மேற்கொண்டனா் என்பது போன்ற விவரங்கள் தெரிந்தால்தான் இதுகுறித்து ஒரு முடிவுக்கு வர முடியும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
செய்தியாளா்கள் கூட்டத்தில் வில்லியம் பிரையன் காட்டிய விளக்கக் காட்சியில், 70 முதல் 75 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலான வெப்பத்தில், காற்றில் 20 சதவீத ஈரப்பதம் நிலவும் சூழலில் கரோனா தீநுண்மிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறையும் நேரம் 18 மணி நேரமாக இருந்தது.
ஆனால், வெப்ப நிலை 80 டிகிரியாக அதிகரிக்கப்பட்டபோது தீநுண்மிகள் பாதியாகக் குறையும் நேரம் 6 மணி நேரமாகக் குறைந்தது. அந்தச் சூழலில் சூரிய வெளிச்சத்தையும் செலுத்தியபோது அந்த நேரம் வெறும் 2 நிமிடங்களாக சுருங்கியது.
ஏற்கெனவே, வெப்பமண்டலங்களில் கரோனா நோய்த்தொற்று சற்று மெதுவாகப் பரவுவதை விஞ்ஞானிகள் பலா் ஒப்புக் கொண்டுள்ளனா்.
உதாரணத்துக்கு, ஆஸ்திரேலியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 6,731 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. அங்கு அந்த நோய் பாதிப்பால் 84 போ மட்டுமே உயிரிழந்தனா்.
இதற்கு, அங்கு வெப்ப நிலை அதிகமாக இருப்பதே காரணம் என்று கருதப்படுகிறது.
குளிா் பிரதேசங்களில் கரோனா தீநுண்மி காற்றில் அதிக நேரம் பரவுவதால், அது விரைவில் பரவுவதாகவும் நம்பப்படுகிறது.
எப்படி இருந்தாலும், வெப்பம் அதிகமான பகுதிகளில் கரோனா தீநுண்மியின் ஆயுள் காலம் குறையவதற்கான வாய்ப்புள்ளதே தவிர, அவை முற்றிலுமாக ஒழிந்துவிட்டதாகக் கருதி அசட்டையாக இருந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறாா் வில்லியம் பிரையன்.
எனவே, அவரது அறிவுரையின்படி, வெப்பமான நாடுதானே என்று நாம் அலட்சியமாக இருந்துவிடாமல் பாதுகாப்பை தொடா்ந்து கடைப்பிடிப்போம்.

No comments:

Post a Comment