Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 1, 2020

மே 3-ம் தேதிக்குப் பின் பல மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு: புதிய விதிமுறைகளை வெளியிடுகிறது உள்துறை அமைச்சகம்


கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள 2-ம் கட்ட லாக் டவுன் மே 3-ம் தேதி முடிந்தபின் பல மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட உள்ளது. அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் 4-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக் டவுனை மத்திய அரசு கொண்டு வந்தது. கரோனா பாதிப்பு குறையாததையடுத்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த லாக் டவுன் காலத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு 26 ஆயிரத்தை எட்டியுள்ளது. 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு கொண்டுவருவதற்கு முன்பும், முதல் கட்ட லாக் டவுன் முடியும் முன்பும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் கரோனா பாதிப்பு குறைவாகவும், பாதிப்பே இல்லாத மாவட்டங்களில் கடந்த 20-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில் மே 3-ம் தேதிக்குப் பின் மீண்டும் லாக் டவுனை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பங்கேற்ற 9 மாநில முதல்வர்களில் புதுச்சேரி, மேகாலயா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட 5 மாநில முதல்வர்கள் லாக் டவுனை நீட்டிக்கவே வலியுறுத்தியுள்ளனர்.
அதேசமயம், பொருளாதார நடவடிக்கையும் முக்கியம், அதையும் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்வர்களிடம் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் லாக் டவுனை 4-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் நீக்குவது குறித்து உள்துறை அமைச்சகம் பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
ஏற்கெனவே 3 கட்டங்களாக பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் லாக் டவுன் காலத்தில் எந்தெந்த கடைகள் திறக்கலாம், தொழில்களை நடத்தலாம் ஆகியவை தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 கட்ட லாக் டவுன் காலத்தில் மக்கள் நன்கு ஒத்துழைப்பு அளித்ததால் கரோனா வைரஸ் பரவுவது பரவலாகக் கட்டுப்படுத்துப்பட்டு நல்ல முன்னேற்றம் தென்பட்டுள்ளது.
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'கரோனா பாதிக்காத பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு 4-ம் தேதிமுதல் அமலாகும். அப்போது அந்தந்தப் பகுதிகளில் மக்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து விரைவில் வெளியிடப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment