
ஈரோடு : ''தமிழகத்தில், 3,000 மாணவர்களுக்கு விரைவில், 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது: மாணவர்கள் நலன் கருதி, முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர், கல்வியாளர்கள், பெற்றோர் என, பலரிடம் ஆலோசித்து தான், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேர்வு நடக்கும். பிற மாவட்ட மாணவர்கள், துாரமாக உள்ள மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தப்படும். 'நீட்' தேர்வு பயிற்சிக்காக, தமிழகம் முழுதும், 3,000 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, 'ஆன்லைனில்' பயிற்சி வழங்கப்படும். மேலும், 15 கல்லுாரிகளில், தங்கும் வசதியுடன், மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கான பயிற்சி பெறவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.



No comments:
Post a Comment