Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 13, 2020

பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் என்ன?

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க ரூ.20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுவரை 3 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 17ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள்: கொரோனா உலக நாடுகளை மண்டியிட வைத்து விட்டது. உலகளவில் 42 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.75 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்திய மக்கள் தங்களுக்கு பிடித்த பலரை கொரோனாவால் இழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார சிக்கலை சமாளிக்க சுமார் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு ஒதுக்கப்படும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதித் தொகுப்பு பயன்படுத்தப்படும் விவரங்களை மத்திய நிதியமைச்சர் நாளை அறிவிப்பார். உள்நாட்டு சந்தையை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது. உள்நாட்டு பொருட்களுக்கு இந்திய மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியாவை சுயசார்புள்ள நாடாக மாற்றுவது மட்டும் தான் 21ம் நூற்றாண்டை இந்தியாவுக்கு சொந்தமானதாக மாற்றுவதற்கான வழி கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் மாற்றங்கள் மக்களின் மன வலிமையை வெளிக்கொணர்ந்துள்ளது. உட்கட்டமைப்பை இந்தியாவின் புதிய அடையாளமாக மாற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற நம்மை நாமே பாதுகாக்க வேண்டியது அவசியம். ஜன்தன், ஆதார் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் கொரோனா பாதிப்ப்பு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் பயன் அளிக்கின்றன. தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அரசு செய்யும் சீர்திருத்தங்கள் விவசாயிகளின் உற்பத்தி சங்கிலியை வலுப்படுத்தும். நாட்டின் ஏழை மக்கள் முன்னேற்றுவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சமயத்தில் இந்தியாவில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்படவில்லை என்றும், தற்போது தினமும் 2 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களையும், 2 லட்சம் N95 முகக்கவசங்களையும் தயாரித்து வருகிறோம். வளர்ச்சி பாதைக்கு இந்தியா திரும்பிவிட்டது. இந்தியாவின் திறன் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன. உலகம் என்பது ஒரே குடும்பம் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும். இந்தியா அளித்துள்ள மருந்துகள் உலகில் உள்ள மக்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. கொரோனா நீண்ட நாட்களுக்கு நம் வாழ்வில் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் நமது வாழ்க்கை கொரோனாவை சுற்றியே இருக்க முடியாது. நாம் முக்கவசம் அணிந்து கொள்வோம், சமூக இடைவெளியை கடைபிடிப்போம். ஆனால் கொரோனா நம்மை தாக்க அனுமதிக்கக் கூடாது. மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும். இதுகுறித்த விவரங்கள் மே 18ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment