காய்கறிகள் மற்றும் பழங்களை உபயோகிப்பதற்கு முன்பு தண்ணீரில் கழுவினால் மட்டும் போதாது. ஏன் என்றால் அவைகளில் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் உடலுக்கு கெடுதி விளைவிப்பவை. அதிலும் விளைச்சலின் இறுதி கட்டத்தில் பயிர்களின் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் காய்கறி மற்றும் பழங்களின் மீது அப்படியே ஒட்டிக்கொண்டிருக்கும்.
அது மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும், உள்ளுறுப்புகளுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் காய்கறிகள் மற்றும் பழவகைகளை சாப்பிடுவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அப்படி கழுவுவது மட்டுமே போதுமானதல்ல. மீண்டும் 90 சதவீத நீருடன் 10 சதவீதம் வினிகர் சேர்த்து அதில் காய்கறிகளை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு மென்மையாக கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது காய்கறிகளின் தோல் பகுதிக்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது.
ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து சிறிது சமையல் சோடாவும் சேர்த்து அதனை பழங்கள் மீது தெளிக்க வேண்டும். பின்னர் துணியால் சுத்தம் செய்துவிட்டு சாப்பிடலாம்.
No comments:
Post a Comment