Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 18, 2020

மீன ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020



குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு - கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது.

சாயா கிரகங்களான ராகு - கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.

மீனம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குருவை ராசிநாதனாகக் கொண்டும் கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே நீங்கள் இரக்கம் அதிகமுள்ளவர்கள். தாய் தந்தையரின் மேல் அதிக பற்றுள்ளவர்கள். திருமணம் செய்துகொடுக்கும் இடத்திலும் பெருமையோடு வாழ்வார்கள். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். பரந்த மனப்பானமை உடையவர். அனைவரும் சுகமாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் இருந்த ராகு தைரிய வீர்ய ஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானத்தில் இருந்த கேது பாக்கிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள்.

மீன ராசிக்கான படம்





இந்த ராகு கேது பெயர்ச்சியில் வாழ்வில் சில சிரமங்களுக்கு மத்தியில் சுப பலன்களை அனுபவிக்க வைக்கும். இருப்பினும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் மூலம் சில நல்ல பலன்களையும் பெறலாம். மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புக்களை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும். எவரிடமும் அளவுடன் பேசுங்கள்.

தம்பி, தங்கைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தாமதம் ஆகுமென்பதால், அவர்களின் அதிருப்தியை சம்பாதிப்பீர்கள். சிலருக்கு உடன்பிறந்தவர்களாலும் உறவினர்களாலும் தொல்லை வந்துவிலகும். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதான வேகத்துடன் செயல்படுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம்.

தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும் போது அலட்சியம் செய்யாமல், உடனடி சிகிச்சை எடுத்து விடுங்கள். கணவன், மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவர்.

வாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும்.

தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தேவைக்கு உட்படுவர். புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். பிற தொழில் செய்வோர் உற்பத்தியை உயர்த்த தரமான பணியாளர்களை பணியமர்த்துவதும், அதனால் அதிக செலவாவதுமான சூழ்நிலை இருக்கும்.

புதியதொழில்நுட்பங்களை பயன்படுத்ததேவையான இயந்திரம் வாங்குவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். புதிய தொழில் துவங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம். வியாபார அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபவிகிதமும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். மேலதிகரிகளை அனுசரித்துச் செல்லவும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.

மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

பூரட்டாதி - 4:

இந்த பெயர்ச்சியில் நீங்கள் அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.

உத்திரட்டாதி:

இந்த பெயர்ச்சியில் நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படுவீர்கள் .வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

ரேவதி:

இந்த பெயர்ச்சி மூலம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மலர் பரிகாரம்: முல்லை மலரை வியாழக்கிழமைதோறும் அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்யுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: " ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ" என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

No comments:

Post a Comment