Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 25, 2020

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது!: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து எட்டு மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 

காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முகமது ஹூமாயுன் உள்ளிட்ட எட்டு மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் படித்த தங்களால் அரையாண்டு தேர்வுக்கு பிறகே அதனை முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது எனவும், தேர்வு நடைமுறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமின்றி மார்ச் மாதத்திற்கு முன் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் வெற்றி என அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டதாகவும், தற்போதைய நிலையில் நீதிமன்றம் அதில் தலையிட்டால் அது மாணவர்களுடைய மேல்படிப்பில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

எனவே மாணவர்களின் நலன் கருதி அரசு கொள்கை முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கொரோனா காலத்தின் போது மாணவர்களின் நலன் கருதியே தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment