Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 7, 2020

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் புதிய வழக்கு


புதுடெல்லி: ‘நாடு முழுவதும் கொரோனோ பாதிப்பு அதிகம் உள்ளதால், செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய தேர்வை ரத்து செய்ய வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், நீட் திருத்த சட்ட மசோதா கடந்த 2017-18ம் ஆண்டு கூட்டத்தொடரின் போதும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில், மருத்துவக் கல்வி மற்றும் அதன் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று சொல்லப்பட்டது. இருப்பினும், இதனை தமிழகம் மற்றும் புதுவை உட்பட சில மாநிலங்கள் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், இந்த தேர்வை இதுவரை சி.பி.எஸ்.இ நிர்வாகம் தான் நடத்தி வந்தது. ஆனா,ல் இந்த ஆண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு நீட் தேர்வுகளை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை கடந்த மே 3ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனோ தொற்று காரணத்தால் இத்தேர்வை செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வை செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடத்தவும் முடிவு செயயப்பட்டது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தனர்.

அதில், ‘கொரோனோ நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், நீட் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது சரியான ஒன்று கிடையாது. மேலும், வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தினால் மாணவர்கள் அனைவரும் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை கண்டிப்பாக ஏற்படும். அதனால், செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, கொரோனோ நோய் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த பிறகு தேர்வை நடத்த வேண்டும். இது குறித்து கடந்த ஜூலை 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையையும் ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment