Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 17, 2020

NEET , JEE - தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!

நீட், ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26ம் தேதிக்கு முன்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதிக்குள் நடைபெறும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக உள்ள இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து, சகஜ நிலை திரும்பிய பின்னர் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்காக மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவில் மையங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி உரிய பாதுகாப்புடன் தேர்வுகள் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணிக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்றங்கள்கூட கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட தொடங்கிவிட்டன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பின் மூலம் திட்டமிட்டபடி நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகள் நடைபெறுவது உறுதி ஆகியுள்ளது.

No comments:

Post a Comment