Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 3, 2020

நவ.16-ல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வரவேற்பு: மாணவர்கள் மொத்தமாகக் கூடுவது தவிர்க்கப்படுமா?- சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தக் கோரிக்கை

பள்ளி, கல்லூரிகள் நவ.16-ம் தேதியன்று திறக்கப்படுவதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மொத்தமாகக் கூடுவதைத் தவிர்க்க, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பல்கலை., கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு, கரோனா தொற்று காரணமாகக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் நவ.16-ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் (9 முதல் 12 வகுப்புகள் வரை), கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்துத் தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் கழகச் செய்தித் தொடர்பாளர் மைக்கேல்ராஜ் கூறும்போது, ''தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை மனதார வரவேற்கிறோம். அதே நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமாகிறது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் குழுவினர் பள்ளிக்கு நேரில் வந்து, மாணவர்களைப் பரிசோதனை செய்ய வேண்டும்.

டெங்கு, சிக்குன்குனியா போன்ற பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்வதைப் போல், இதையும் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா? வீட்டில் யாருக்கும் பாதிப்பு உள்ளதா? வெளியூர் சென்று வந்தனரா? என்பதைக் கேட்டறிய வேண்டும். இப்போது வீடு, வீடாகச் செய்யப்படும் இந்தக் கணக்கெடுப்பைப் பள்ளிகள்தோறும் மேற்கொள்ள வேண்டும். இதனால் மாணவர்களின் அச்சத்தைப் போக்க முடியும். ஓரிரு வாரங்களுக்குச் சுகாதாரத்துறை இப்பணியை மேற்கொண்டே ஆக வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்பு நடத்த வேண்டும். 9, 10-ம் வகுப்புகளுக்கு ஒருநாளும், 11, 12-ம் வகுப்புகளுக்கு மற்றொரு நாளும் வகுப்பு நடத்த வேண்டும். இதனால் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்'' என்றார்.

இதற்கிடையே தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி கூறும்போது, ''நவ.16-ல் கல்லூரிகளைத் திறப்பது வரவேற்புக்குரியது. ஆன்லைன் மூலமாகப் பாடங்களை நடத்தி முடிப்பது ஏற்புடையது அல்ல. ஆசிரியரும், மாணவரும் நேருக்கு நேர் கற்றல், கற்பித்தல் பணிகளைச் செய்வது சிறந்த கல்வியாக இருக்கும். செய்முறைத் தேர்வுகள் கொண்ட படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு வந்துதான் ஆக வேண்டும்.

சில கல்லூரிகளில் 5 ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். அக்கல்லூரிகளில் மாணவர்களை மொத்தமாக வரவழைப்பது பாதுகாப்பாக இருக்காது. எனவே 1, 2-ம் ஆண்டுகளுக்கு ஒருநாளும், 3 மற்றும் முதுநிலை 1, 2-ம் ஆண்டுகளுக்கு மற்றொரு நாளும் வகுப்புகள் நடத்தி, கூட்டதைக் குறைக்க வேண்டும்'' என்றார்.

இந்நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் கழகக் கோவை மண்டலத் தலைவர் பி.திருநாவுக்கரசு கூறும்போது, ''2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குப் பெரும்பாலான பாடப்பகுதிகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. தீபாவளிப் பண்டிகை முடிந்த கையோடு பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்குப் பதிலாக டிசம்பர் முதல் வாரத்தில் திறக்கலாம். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை முடிந்த பிறகுதான், கரோனோ தொற்று வேகமாகப் பரவியது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு உரிய திட்டங்கள் வகுக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கூறும்போது, ''வீடுகளுக்குள் பல மாதங்களாக முடங்கிக் கிடப்பது மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் கல்வியும்தான். கல்லூரிகளைத் திறப்பது நல்ல முடிவு. மாணவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள், கிருமிநானிசிகளை வழங்க வேண்டும். கைகளைக் கழுவிச் சுத்தம் செய்வதற்குப் போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

வகுப்பறைகள், மேஜை இருக்கைகள், மாணவர்கள் தொடும் இடங்களில் தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக விடுதிகளைத் திறந்து சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்'' என்றனர்.

No comments:

Post a Comment