Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 2, 2020

உயர்கல்வி படிக்க அனுமதி கோரிய 75 ஆயிரம் கோப்புகள் மாயம் - ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

உயர்கல்வி படிக்க அனுமதி கேட்டு, அரசு பள்ளி ஆசிரியர்கள், 75 ஆயிரம் பேர், இணை இயக்குனருக்கு அனுப்பிய கோப்புகள், மாயமாகி உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனரகம் தெளிவான உத்தரவு பிறப்பிக்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களின் கல்வி தகுதியை உயர்த்தும் வகையில், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.அதாவது, ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வியை வழங்கவும், அவர்களின் கல்வி தகுதியை உயர்த்தி கொள்ள, இந்த சலுகை வழங்கப்படுகிறது.இதன்படி, உயர்கல்வி படிக்க செல்லும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் அனுமதி அளிப்பார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, கல்வித்துறை அலுவலகத்துக்கு கோப்புகள் வந்து செல்லும்.இந்நிலையில், உயர்கல்விக்கான அனுமதி பெற விண்ணப்பித்த, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்ப கோப்புகள், பணியாளர் பிரிவு இணை இயக்குனரகத்தில் இருந்து மாயமாகி விட்டதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அதனால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு உயர்கல்வி கட்டணம் செலுத்தி விட்டு, ஆசிரியர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

இதுகுறித்து, அதிகாரிகளை ஆசிரியர்கள் அணுகினால், 'இணை இயக்குனர் அலுவலகத்தில் பாருங்கள்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும்; 'முதன்மை கல்வி அதிகாரிகளை பாருங்கள்' என, இணை இயக்குனரும் மாறி, மாறி கூறுவதாக ஆசிரியர்கள், தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: இந்த ஆண்டு, மார்ச், 9க்கு முன் தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே, உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, அரசாணை பிறப்பிக்கும் முன், அனுமதி கேட்டவர்களின் விண்ணப்பங்களுக்கு கூட, முதன்மை கல்வி அதிகாரிகளோ, பணியாளர் இணை இயக்குனரோ, உரிய பதிலளிக்காமல் உள்ளனர்.கடந்த, 2015- - 16ம் கல்வி ஆண்டு முதல், உயர்கல்வி படிக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, இதுவரை எந்த பதிலும் இல்லை. சி.இ.ஓ., அலுவலகத்திலும், இணை இயக்குனர் அலுவலகத்திலும், கோப்புகளை தேடும் நிலை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

பள்ளி கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் பொன்னையா, இதுபற்றி கூறுகையில், ''எங்கள் அலுவலகத்தில், எந்த கோப்பும் நிற்காது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கோப்புகளை அனுப்பாமல் இருக்கலாம். அவர்களிடம் தான் ஆசிரியர்கள் கேட்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment