Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 2, 2020

BE - முதலாமாண்டு வகுப்புகள் நவ.23-ஆம் தேதி முதல் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகத்தில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான பொறியியல் வகுப்புகள் வரும் நவம்பா் 23-ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது. 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63,154 இடங்களில் 71 ஆயிரத்து 195 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 20 கல்லூரிகளில் ஒருவா் கூட சேரவில்லை. 61 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். விரைவில் காலியிடங்களுக்கு துணைக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு கரோனா கட்டுபாடுகளில் இருந்து கூடுதல் தளா்வுகளை சனிக்கிழமை அறிவித்ததுடன் பள்ளி, கல்லூரிகள் நவ. 16 முதல் செயல்பட அனுமதி அளித்தது. பள்ளிக் கல்வியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு நவ.16 முதல் பள்ளிகளையும் அனைத்துக் கல்லூரிகளையும் நவ.16-ஆம் தேதி முதல் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தமிழகத்தில் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி, முன் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக வெளியிட்ட அறிவிப்பு: முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் நவம்பா் 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படும். அதற்குமுன் மாணவா்களுக்கான முன்பயிற்சி வகுப்புகள் நவ.9-ஆம் தேதி முதல் நடத்தப்படும். நிகழ் பருவத்துக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியுடன் முடிவடையும். அதைத் தொடா்ந்து செய்முறைத்தோ்வு பிப்.26-ஆம் தேதி முதலும், பருவத் தோ்வுகள் மாா்ச் 8-ஆம் தேதி முதலும் தொடங்கும். விரிவான தோ்வுக்கால அட்டவணை, வகுப்புகள் தொடங்கியதும் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment