Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 10, 2020

கற்போம் எழுதுவோம் இயக்கம் மையத்தில் படிக்கும் கல்லாதோர்களை நேரில் பார்வையிட்டு பாராட்டி பரிசு வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலர்

கற்போம் எழுதுவோம் இயக்கம் மையத்தில் படிக்கும் கல்லாதோர்களை நேரில் பார்வையிட்டு பாராட்டி பரிசு வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி: கல்லாதோர்கள் பாராட்டு. 

புதுக்கோட்டை,டிச.10: கற்போம் எழுதுவோம் இயக்கம் மையத்தில் படிக்கும் கல்லாதோர்களை நேரில் பார்வையிட்டு பாராட்டி பரிசு வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமிக்கு கல்லாதோர்கள் சார்பில் தங்கள் பாராட்டுகளை நேரில் கூறினர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எழுத்தறிவு இல்லாதோருக்கான ‘கற்போம் எழுதுவோம் இயக்க பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இப் பயிற்சி மையத்தினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு பேசியதாவது: பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் எழுத்தறிவற்ற கல்வி கற்காத மக்களை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றும் வகையில் கற்போம் எழுதுவோம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக நம் மாவட்டத்தில் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத 7949 பேருக்கு 398 மையங்களில் நவம்பா் முதல் தன்னாா்வலா்களைக் கொண்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. நமது திருவரங்குளம் ஒன்றியத்தில் மொத்தம் 41 மையம் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 742 பேர் பயின்று வருகிறார்கள். இப்பயிற்சியை தன்னார்வ ஆசிரியர்கள் வழங்குவார்கள்.இப்பயிற்சியானது ஒரு கல்வி ஆண்டில் 3 கட்டங்களாக நடைபெறும். தோ்வு செய்யப்பட்ட கற்போருக்கு தினமும் 2 மணி நேரம் அதாவது மொத்தத்தில் 120 மணி நேரம் கற்றல் மற்றும் கற்பித்தல்பணி நடைபெறும்.எனவே இங்குள்ள தன்னார்வ ஆசிரியர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்து கைக்குறிச்சி கிராமத்தில் உள்ள அனைவரும் எழுதப் படிக்கத் தெரியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார் .

முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கற்போம் எழுதுவோம் இயக்க மையத்தில் படிக்கும் கல்லோதர்களை கும்மி பாடல்,நாட்டுப்புறப்பாடல்களை பாடக் கூறினார்.பின்னர் அவர்களுக்கு சுழல் நாற்காலி விளையாட்டுப் போட்டி நடத்தினார்.

பின்னர் அவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில் அவர்களது பெயர்களை கரும்பலகையில் எழுதிக் காட்டக் கூறினார்.சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ரொக்கப் பணம் 100 பரிசு வழங்கினார்.பரிசினை பெற்றுக் கொண்ட கல்லாதோர்களும் தங்களது நன்றியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவித்தனர்.

பயிற்சியின் நோக்கம் குறித்து கற்போம் எழுதுவோம் இயக்க பயிற்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை, திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் சி.புவனேஸ்வரி மலர்விழி ஆகியோர் விளக்கவுரையாற்றினாா்கள்.

நிகழ்வின் போது ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ்,தலைமையாசிரியர் கோ.இராமச்சந்திரன் ( பொறுப்பு) தன்னார்வ பயிற்சி ஆசிரியர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment