Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 25, 2022

1-9ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடம்- தமிழக அரசு

பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழகத்தில் 1-9ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
1 முதல் 9 -ம் வகுப்பு வரை பள்ளிகளில் நாடு முழுவதும் உடற்கல்வி கட்டாய கல்வியாக அறிவிக்கக்கோரி கிருஷ்ணா பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழக அரசு 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உடற்கல்வி தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் விளையாட்டு பாடத் தேர்வில் செய்முறை மற்றும் எழுத்து தேர்வு முறை என 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுவதாகவும் தமிழக அரசின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி பாடத்திற்காக விளையாட்டு படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற தகுதியான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது இரண்டு விளையாட்டுக்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது எனவும் வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன எனவும் இவை தவிர வாரம் ஒருமுறை ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுவதாக தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் உடற் கல்வியை பாடமாக படித்து உள்ளதால் பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி பாடம் தேவையில்லை. மேலும் பள்ளிகளில் தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போது விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படுவதாகவும் விளையாட்டுக்களை ஊக்குவிக்கவும் புதிய வகையான விளையாட்டுக்களை மேம்படுத்தவும் ஆண்டுக்கு 10 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டான ஹாக்கி, தேசிய அளவிலான தடகள மற்றும் பிற விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் திறமையானவர்களை கண்டறியவும் பள்ளிகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்கு தேவையான நிதியை தமிழக அரசு வழங்கி வருகிறது எனவும் மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் அதற்காக சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment