Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 22, 2023

ஜனவரி மாத சம்பளம் கிடைக்குமா? அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிக்கல்!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, ஜனவரி மாத ஊதிய கேட்பு விபரங்களை, நிதித் துறை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி திடீரென நிறுத்தப்பட்டதால், பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும், நிதித்துறை வழியே சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்காக நிதித் துறை சார்பில், ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற டிஜிட்டல் தளம் செயல்படுகிறது.

இந்த தளத்தில், ஒவ்வொரு மாதமும், 15ம் தேதி முதல், 28ம் தேதிக்குள், ஆசிரியர்கள், அலுவலர்கள், துறை ஊழியர்களின் பணி நாட்கள், விடுப்பு உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, மேல் அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகே கருவூலத்தில் இருந்து சம்பளம் விடுவிக்கப்படும்.

ஜனவரி மாத சம்பளத்துக்கான பணி விபரங்கள்தாக்கல் செய்ய, கடந்த 15ம் தேதி முதல் 'ஆன்லைன்' தளத்தில் அனுமதிக்கப்பட்டது.

ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, ஒரு சில நாட்களிலேயே, இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டதால், சம்பளம் கேட்பு பதிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், ஜனவரி மாத சம்பளம் தாமதமாகும் என, ஆசிரியர்களும், ஊழியர்களும் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு நிதி ஆண்டின் துவக்கமான ஏப்ரலில், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான ஆசிரியர், பணியாளர்களுக்கான சம்பளத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்படும்.

இந்த ஒதுக்கீடு, நிதித் துறை வழியே ஊதியமாக பெறப்படும். நடப்பு நிதி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன.

தற்போதே நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு முடிந்து விட்டது என்றும், சம்பளம் வழங்க நிதி இல்லை என்றும் கூறி, ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., தளத்தில், சம்பளப் பதிவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்களும், பணியாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை விரைந்து செயல்பட்டு, நிதித் துறை வழியே சம்பள கேட்பு விபரங்களை பதிவு செய்யும் வசதியை மீட்டு தரவும், சம்பளம் தாமதமாகாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment