JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வேர்க்கடலை நிறைய பேருக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ். நட்ஸ்களில் வேர்க்கடலை ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான உணவுப் பொருள்.
குறிப்பாக குளிர்காலத்தில் நிறைய பேருக்கு வேர்க்கடலையை சாப்பிட பிடிக்கும். ஏனெனில் இதில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள் உடலுக்குள் ஒருவித வெப்பத்தை அளிக்கும். மேலும் வேர்க்கடலையில் நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை அதிகம் உள்ளன.
என்னதான் வேர்க்கடலை ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதிகமாக உட்கொள்ளும் போது அது உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது. குறிப்பாக ஏற்கனவே ஒருசில ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், வேர்க்கடலையை அதிகளவில் உட்கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால், அது நிலைமையை மோசமாக்கிவிடும். இப்போது எந்த பிரச்சனைகளைக் கொண்டவர்கள் வேர்க்கடலையை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
உடல் பருமன்
நீங்கள் ஏற்கனவே உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உடலில் கொழுப்புக்களை அதிகமாக கொண்டிருந்தால், வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள கொழுப்புக்கள், உடல் எடையை இன்னும் அதிகரிக்கச் செய்யும். வேர்க்கடலையில் கொழுப்புக்களைத் தவிர கலோரிகளும் அதிகளவில் உள்ளன. எனவே எடையைக் குறைக்கும் முயற்சியில் இருக்கும் போது, வேர்க்கடலையை உங்கள் உணவில் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், உடல் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும்.
செரிமான கோளாறு
உங்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்கனவே இருந்தால், வேர்க்கடலையை சாப்பிடாதீர்கள். ஏனெனில் வேர்க்கடலையில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது. புரோட்டீன் நிறைந்த வேர்க்கடலையை அதிகளவில் உட்கொள்ளும் போது, அது செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். முக்கியமாக மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வேர்க்கடலையை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உப்பு நிறைந்த வேர்க்கடலையை அறவே தொடக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும். இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, இதயம் தொடர்பான நோய்களின் அபாயமும் அதிகரிக்கும்.
கல்லீரல் நோய்கள்
உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருந்தால் அல்லது மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது தவிர, கல்லீரல் செயல்பாடு பலவீனமாக இருந்தாலும் வேர்க்கடலையை சாப்பிடக்கூடாது. ஏனெனில் கல்லீரலில் ஏற்கனவே அதிகளவில் கொழுப்பு இருந்தால், அது வேர்க்கடலையில் உள்ள கொழுப்பை உறிஞ்சாமல், நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
முகப்பரு பிரச்சனை
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் அல்லது முகப்பரு அதிகம் வருமானால், வேர்க்கடலையை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வேர்க்கடலையில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகளவில் உள்ளன. இவற்றை அதிகம் உட்கொள்ளும் போது, முகத்தில் வலிமிக்க பருக்களை அதிகம் வரத் தூண்டும்.
வேர்க்கடலை அலர்ஜி
நிறைய பேருக்கு வேர்க்கடலை அலர்ஜி உள்ளது. ஆனால் பலருக்கு இது தெரிவதில்லை. வேர்க்கடலை அலர்ஜி இருப்பதை அறியாமல் ஒருவர் வேர்க்கடலையை உட்கொள்ளும் போது, அதன் விளைவாக சருமத்தில் அரிப்புகள், முக வீக்கம், மூக்கு ஒழுகல், தொண்டை மற்றும் வாயில் கூச்சம் போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும்.
No comments:
Post a Comment