இன்றைக்கும் நம்முடைய தாத்தா, பாட்டிக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் அவர்களின் உணவு முறை தான்.
அரிசி, கோதுமையை விட அதிகளவில் திணை, சம்பா, கம்பு, கேழ்வரகு, சோளம் , வரகு போன்ற சிறு தானியங்களைத்தான் உணவில் சேர்த்துக்கொண்டனர் . ஆனால் இன்றைக்கு நாம் பாரம்பரிய உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பதை மறந்துவிட்டோம். கலாச்சாரம் என்கிற பெயரில் பீட்சா, பர்கர், கேக், குக்கீஸ்கள் என பெரும்பாலும் மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் தான் ஏராளமான நோய்களை நாம் விலைக்கொடுத்து வாங்குகின்றோம்.
இந்நேரத்தில் தான் சிறுதானியங்களின் பலன்களை நாம் அறிய முயல்வோம். இது ஒரு சத்துள்ள உணவுப்பொருளாக இல்லாமல் உடலுக்கு பல வகைகளில் ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகளாக உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே இந்நேரத்தில் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..
இரத்த சர்க்கரை அளவைப் பராமரித்தல் : சிறுதானியங்களில் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இதோடு நார்ச்சத்துக்களும் அதிகளவு உள்ளதால் சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமாக உதவுகிறது. இதனால் உடலில் இரத்த சரக்கரை அளவை அதிகரிக்காமல் முறையாக நிர்வகிக்க உதவுகிறது.
ஆஸ்துமாவைத் தடுக்கிறது : நம்மில் பெரும்பாலான மக்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. இந்நேரத்தில் கோதுமையில் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடும் போது ஒவ்வாமை ஏற்படக்கூடும். இந்த சூழலில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும் சிறுதானிய உணவுகளை நாம் சாப்பிடும் போது, ஆஸ்துமாவின் விளைவுகள் கணிசமாக குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதிக கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துதல் : நொறுக்குத் தீனிகள், ஆரோக்கியமில்லாத உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதால் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் சேர்கிறது. இதனால் இளம் வயதிலேயே மாரடைப்பு பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், சிறுதானியங்களை உங்களது உணவுமுறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் சாப்பிடும் போது தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றவும் உதவியாக உள்ளது.
எடை இழப்பை ஊக்குவித்தல் : சிறுதானியங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை மேலாண்மைக்கு சிறந்த உணவாக உள்ளது. உடல் எடைக்குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் அரிசி சாப்பிடுவதைத் தவிர்த்து சிறுதானியங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவும். சிறுதானியங்கள் சாப்பிடுவது அதிகப்படியான உணவையும், தேவையற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதையும் தடுக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் : திணை, சாமை, கேப்பை, வரகு போன்ற சிறுதானியங்களில் துத்தநாகம், பாஸ்பரஸ், மெக்னீசியம், போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ஃபீனாலிக் கலவைகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது.
இவ்வாறு சிறுதானியங்களில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால் தான், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், சிறுதானியங்களின் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்க முயற்சி செய்துவருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் சிறுதானியங்களை ஊக்குவிக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் எனவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment