ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மேயர் பிரியா வழங்கினார்.
இதுகுறித்து பெருநகர மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 229முதுநிலை ஆசிரியர்கள் ஏற்கெனவே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மேலும் 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் 12 தமிழ் ஆசிரியர்கள், ஆங்கிலம் 5, கணிதம் 4. இயற்பியல் 3, வேதியியல் 5, தாவரவியல் 4, விலங்கியல் 4, வணிகவியல் 2, பொருளாதாரம் 6, வரலாறு 2, அரசியல் அறிவியல் 1, மனையியல் 2, உடற்கல்வி ஆசிரியர் 1 என மொத்தம் 51 ஆசிரியர்களுக்கு மேயர் பிரியா நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நியமிக்கப்பட்ட ஆசிரியர் களுக்கு மேயர் பிரியா,“சென்னை பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்கள் ஒவ்வொரு வாரமும் பாடவாரியாக வாராந்திரத் தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். கற்றல் அடைவுத் திறன் குறைவாக உள்ள மாணவர்களை பாடப்பிரிவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
அன்றன்று நடத்தும் பாடங்களை மாணவர்கள் ஆர்வமுடன் கற்கும் வகையில் நாள்தோறும் வீட்டுப்பாடம் வழங்கி கண்காணிக்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment