நடிகர் தனுஷ் நடிப்பில் நாளை மறுநாள் 17ம் தேதி வெளியாக உள்ள "வாத்தி" படத்தின் விளம்பரங்கள் வேகமாகப் பரவி வருகிறது.
இன்று தினசரி பத்திரிகைகளில் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், அந்த போஸ்டர்களை பார்த்த ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கங்களும் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுக்கண்ணைத் திறக்கும் ஆசிரியர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக "வாத்தி" என்ற படப் பெயர் அமைந்துள்ளது என்று தங்களின் வேதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் (ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) சாமி.சத்தியமூர்த்தி சமூக வலைத்தளங்களில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திப் படப் பெயரை மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து சாமி.சத்தியமூர்த்தி நம்மிடம்.. 'சில திரைப்படங்களில் ஆசிரியர் பணி அறப்பணி என்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். பல படங்களில் ஆசிரியர்களை வேறு விதமாகச் சித்தரித்திருக்கிறார்கள். இப்போது "வாத்தி" என்று படப் பெயர் வைத்தது எங்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள 4.5 லட்சம் ஆசிரியர்களுக்கும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.
திரைப்பட இயக்குநர், கலைஞர்கள் அத்தனை பேருக்கும் கல்வியைப் புகட்டி அவர்களின் தனித்திறன்களை வளர்த்தெடுத்த ஆசிரியர்களை அவர்களே கொச்சைப்படுத்தலாமா? 17ம் தேதி வாத்தி படம் திரைக்கு வர உள்ளது. அதற்குள் எங்கள் மனவேதனையை மனதில் கொண்டு படத்தின் பெயரை மாற்றுங்கள். தமிழ்நாடு அரசும் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment