எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் கல்வி ஆண்டிலும் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் முதல் பருவத்துக்கான மாநில அளவிலான பயிற்சி மதுரையில் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
2022-23-ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான (2023-24) எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி தொடர்பான தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கான முதல் பருவ பாடங்கள் உருவாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதைத்தொடர்ந்து, 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் முதல் பருவத்துக்கான பயிற்சிகளை மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி மதுரை நாகமலை புதுக்கோட்டை பில்லர் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 5 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் ஏப்ரல் 4-ம் தேதி இரவு 8 மணிக்குள் வருகை புரிய வசதியாக அவர்களை பணிவிடுப்பு செய்து அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார வளமைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து, மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஏப்ரல் 10 முதல் 12-ம் தேதி வரையும் அதன்பிறகு ஒன்றிய அளவிலான பயிற்சி ஏப்ரல் 24 முதல் 26-ம் தேதி வரையும் நடத்தப்படும்.
No comments:
Post a Comment