Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 22, 2023

பூமி பற்றிய இந்த 10 சுவாரஸ்யமான உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

சர்வதேச பூமி தினம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது கிரகத்தை கௌரவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாள், 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ல் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. அன்றுதான், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக, அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் வீதிகளில் சுமார் இரண்டு கோடி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பூமி தினத்தை முன்னிட்டு, நாம் வாழும் இந்த கிரகத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைத் தெரிந்துகொள்வோம்.

1. பூமி ஒரு சரியான கோளம் அல்ல

நமது கிரகம் பொதுவாக ஒரு சரியான கோளமாக குறிப்பிடப்படுகிறது, ஆனால் அது அதன் துல்லியமான வடிவம் அல்ல. பூமி, துருவங்களில் தட்டையானது, எனவே அதன் வடிவம் மிகவும் துல்லியமாக "oblate spheroid" என்று அழைக்கப்படுகிறது. மற்ற கோள்களைப் போலவே, புவியீர்ப்பு மற்றும் சுழற்சியால் உருவாகும் மையவிலக்கு விசையின் விளைவு துருவங்களை தட்டையாக்கி, பூமத்திய ரேகை விரிவாக்கத்தை உருவாக்குகிறது. எனவே, பூமத்திய ரேகையில் பூமியின் விட்டம் ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்தின் விட்டத்தை விட சுமார் 43 கி.மீ. பெரியது.

2. பூமியின் 70%க்கும் அதிகமான பகுதியை நீர் சூழ்ந்துள்ளது

பூமியின் மேற்பரப்பில் முக்கால்வாசி பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது

பூமியில் திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் நீர் உள்ளது. இது பனிப்பாறைகள், சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் வடிவில் பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட முக்கால் பகுதியை உள்ளடக்கியுள்ளது.

கிரகத்தின் மொத்த நீரில் 97% கடல்களில் உப்பு நீராக உள்ளது.

3. விண்வெளி, பூமியிலிருந்து 100 கிமீ-க்கு மேலே தொடங்குகிறது

வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லை கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ள கர்மான் கோடு என்று அழைக்கப்படுகிறது.

75% வளிமண்டல பகுதி, கடலின் மேற்பரப்பில் இருந்து முதல் 11 கிமீ உயரத்தில் காணப்படுகிறது.

4. பூமியில் இரும்புக் கரு உள்ளது

பூமியின் உட்கரு இரும்பினால் ஆனது

பூமி சூரிய குடும்பத்தில் அடர்த்தியான மற்றும் ஐந்தாவது பெரிய கிரகமாகும். பூமியின் உள்பகுதி சுமார் 1,200கிமீ ஆரம் கொண்ட திடமான பந்தாக கருதப்படுகிறது.

இது முக்கியமாக இரும்பினால் ஆனது. இதன் எடையில் 85% இரும்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மையத்தில் 10 சதவீதம் நிக்கல் உள்ளது.

5. உயிர்கள் இருப்பதாக அறியப்பட்ட ஒரே கிரகம் பூமி

பிரபஞ்சத்தில் உயிர்கள் இருக்கின்றனவா என்று சரிபார்க்க முடிந்த, ஒரே வானியல் பொருள் பூமிதான். தற்போது சுமார் 12 லட்சம் பட்டியலிடப்பட்ட விலங்கினங்கள் உள்ளன.

இருப்பினும் இது மொத்தத்தில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே என்று கருதப்படுகிறது.

2011ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் இயற்கை உலகில் ஒட்டுமொத்தமாக 87 லட்சம் இனங்கள் இருப்பதாக மதிப்பிட்டனர். பூமி தோராயமாக 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

பூமியின் இயற்பியல் பண்புகள், அதன் புவியியல் வரலாறு மற்றும் அதன் சுற்றுப்பாதை ஆகியவை லட்சக்கணக்கான ஆண்டுகளாக உயிர்கள் வாழ அனுமதித்துள்ளன.

6. புவி ஈர்ப்பு விசை எல்லா இடங்களிலும் சமமாக இல்லை

பூமியின் ஈர்ப்பு விசையின் வலிமையில் வேறுபாடுகள் உள்ளன

நமது கிரகம் உண்மையில் ஒரு சரியான கோளமாக இல்லாததாலும், 'நிறை' சீரான முறையில் விநியோகிக்கப்படாததாலும், ஈர்ப்பு விசையின் வலிமையில் வேறுபாடுகள் உள்ளன.

உதாரணமாக, நாம் பூமத்திய ரேகையிலிருந்து துருவங்களை நோக்கி நகரும்போது, புவியீர்ப்பு விசையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கிறது. ஆனால், அதன் வேறுபாடு மனிதர்களுக்கு புலப்படாது.

7. பூமி - கடுங்குளிர் vs அதீத வெப்பம்

நமது கிரகம் முரண்பாடுகள் நிறைந்தது. அதன் தட்பவெப்ப நிலைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதன் தனித்தன்மையைக் கொண்டுள்ளன.

பூமியில் மிகவும் வெப்பமான இடமாகக் கருதப்படும் பல்வேறு பகுதிகள் உள்ளன. ஆனால் இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிக வெப்பநிலை கொண்ட இடம் அமெரிக்காவில் உள்ள டெத் வேலியில் உள்ளது.

அங்கு 1913ஆம் ஆண்டு, ஜூலை 10ஆம் தேதி வெப்பம் 56.7C-ஆக பதிவானது. மறுமுனையில் அன்டார்டிகா உள்ளது. வோஸ்டாக் நிலையத்தில் 31 ஜூலை 1983இல், வெப்பம் −89.2Cஆக குறைந்தது.

8. பூமியின் மிகப்பெரிய உயிரின கட்டமைப்பு

ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாக கிரேட் பேரியர் ரீஃப் இருக்கிறது

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் அமைந்துள்ள கிரேட் பேரியர் ரீஃப், கிரகத்தில் வாழும் உயிரினங்களால் ஆன மிகப்பெரிய ஒற்றை அமைப்பாகும்.

விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே அமைப்பு இதுதான். 2,000 கிலோ மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட இந்த அமைப்பில், ஆயிரக்கணக்கான கடல் வாழ் இனங்கள் வாழ்கின்றன.

1981ஆம் ஆண்டில், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பகுதியாக இது அறிவிக்கப்பட்டது.

9. சூரிய குடும்பத்தில் தீவிர டெக்டோனிக் தட்டுகளைக் கொண்ட ஒரே கிரகம்

இந்த தட்டுகளின் இயக்கம் நமது கிரகத்தின் மேற்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

மலைகள், நில அதிர்வு செயல்பாடு மற்றும் எரிமலைகள் உருவாவதற்கும் இந்த தட்டுகள் காரணமாகின்றன.

இந்த தட்டுகளின் சுழற்சி பூமியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடல் தளங்களை நிரந்தரமாக புதுப்பிப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களை மறுசுழற்சி செய்வதில் பங்களிக்கிறது.

10. பூமிக்கு ஒரு பாதுகாப்பு கவசம் உள்ளது

பூமியின் காந்தப்புலம் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. பூமியின் காந்தப்புலம் சூரியனில் இருந்து வரும் உயர் ஆற்றல் துகள்களின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு எதிராக ஒரு கவசமாக செயல்படுகிறது.

இந்த புலம் பூமியின் உள் மையத்திலிருந்து சூரியக் காற்றைச் சந்திக்கும் எல்லை வரை நீண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், சில விலங்குகள் தங்கள் வழியைக் கண்டறியவும் காந்தப்புலம் உதவுகிறது. நாம் ஒரு திசைகாட்டியைப் பயன்படுத்தினால் அது நமக்கும் உதவுகிறது.

No comments:

Post a Comment