Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 30, 2023

அரசு மேல்நிலை பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு: மே 5 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது


அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டுதல் குழு, மே 5-ம் தேதி முதல் செயல்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம் பகவத், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர், முன்னாள் மாணவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் மற்றும் என்எஸ்எஸ் மாணவர் இடம் பெற்றிருப்பர். இந்த குழுவின் மூலம் உயர்கல்வியில் சேருவதற்கான ஆலோசனைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

கருத்தாளர்களுக்கான பயிற்சி

மேலும், இடைநின்ற மாணவர்களை மீட்பதற்கான பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும். இந்த குழு, மே 5-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதுகுறித்துமாநில, மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி தரப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, உயர்கல்வியில் எத்தனை விதமான படிப்புகள் உள்ளன, அதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய காணொலியை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

அதில், உயர் கல்வி படிப்புகள், தேசிய நுழைவுத் தேர்வுகள் சார்ந்து பல்வேறுதகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதை மாணவர்களுக்கு எடுத்துரைத்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment