Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 28, 2023

மத்திய அரசின் ‘பதோ பர்தேஷ்’ திட்டம் திடீர் நிறுத்தம் - மாணவர்களின் வெளிநாட்டு கல்வி கனவு கேள்விக்குறி?

மத்திய அரசின் ‘பதோ பர்தேஷ்’ கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதால், வெளிநாடுகளில் சிறுபான்மை மாணவர்கள் உயர் கல்வி படிப்பது கேள்விக் குறியாகியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளில் பட்டமேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் பயில்வதற்கு, மத்திய அரசு ‘பதோ பர்தேஷ்’ திட்டத்தை செயல்படுத்தி வந்தது. முஸ்லிம், கிறிஸ்தவர்கள், ஜெயின், புத்தமதம் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாயத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி, வெளிநாடுகளில் கல்வி பயின்று வந்தனர்.

இந்த திட்டம், கடந்த 2006-ம் ஆண்டு தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறப்பாகச் செயல்பட்டு வந்த இத்திட்டம், கடந்த 2021-22 கல்வியாண்டோடு முடக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு இத்திட்டத்த்தில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த காலங்களில் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றார்கள் என்று ஒப்பீடு ஆய்வு செய்வதற்காக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரப்பட்டது.

இது குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: ‘பதோ பர்தேஷ்’ திட்டத்தில், கடந்த 2014-15 முதல் 2021-22 கல்வியாண்டு வரையிலான மொத்தம் 8 ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றார்கள் என்ற ஒப்பீடு புள்ளி விவரங்களை, மத்திய அரசின் ஆன்லைன் ஆர்டிஐ மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில், நாடு முழுவதும் மொத்தம் 20,366 மாணவர்கள் இத்திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். இதில், கேரள மாநிலத்தில் மட்டும் 10,964 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். அதாவது, நாடு முழுவதும் பயனடைந்த மொத்த மாணவர்களில் கேரள மாநிலத்தவர் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். அதேநேரம், நாடு முழுவதும் இதுவரை 11,182 பெண்கள் பயன்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-22 கல்வியாண்டில் மட்டும் 4,623 பேர் பயன்பெற்றிருந்த நிலையில், மத்திய அரசு திடீரென கடந்த 2022-23 கல்வியாண்டில் இந்த திட்டத்தை நிறுத்தியது. இதனால், வெளிநாட்டில் உயர் கல்வி பயிலும் கனவோடு இருந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, மாணவர்கள், கல்வியாளர்கள், சிறுபான்மையினர் நல அமைப்புகள், மக்களவை உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்தனர்.

குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார் எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், சிறுபான்மை மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, பதோ பர்தேஷ் திட்டத்தை மறுபடியும் இந்த கல்வியாண்டு (2023-24) முதல் நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு முன்வரவேண்டும், என்றார்.

No comments:

Post a Comment