Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 18, 2023

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: பொது உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 கி.மீ சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சேர்க்கை மறுப்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் பொதுவான உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த முத்து என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளும், 25 சதவீத இடங்களில் பின்தங்கிய குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிப்பதாக கூறி பல குழந்தைகளின் விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் நிராகரிக்கின்றன. ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இயலாத நிலையே இருந்து வருகிறது" என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை மனுதாரர் வழங்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசுத்தரப்பு பதில மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பது குறித்த இந்த மனுவில் முழுமையான விவரங்கள் இல்லை. எனவே இதில் பொதுப்படையாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனக் கூறி, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment