Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 6, 2023

இனி பின் நம்பர் இல்லாமலேயே ஈசியா பணம் அனுப்ப முடியும்... போன்பே-வில் அசத்தல் அம்சம் அறிமுகம்!


பேடியெம் ஆப்பை தொடர்ந்து PIN நம்பர் இல்லாமல் சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியையும் போன்பே அறிமுகம் செய்துள்ளது.

நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு எளிய வசதியாக யுபிஐ ஆப்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று போன்பே. வங்கிக் கணக்குடன் இந்த ஆப்பை இணைத்துக் கொண்டால் க்யூஆர் கோடு மற்றும் பின் நம்பர் செலுத்தி பணம் அனுப்ப முடியும். இந்த வசதியால் வர்த்தக, வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்கவும், டிக்கெட் புக்கிங் செய்யவும் மிக எளிமையாக உள்ளது.

அதை மேலும் போன்பே நிறுவனம் போன்பே லைட் என்ற பெயரில் எளிமையாக்கியுள்ளது. இந்த யுபிஐ லைட் அம்சமானது நீங்கள் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கிகளின் நிகழ் நேர அமைப்புகளுடன் நேராக இணைக்கப்படாது. மாறாக யுபிஐ லைட் அக்கவுண்ட்டில் குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு அதைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும்.

இது வங்கிகளுடன் இணைந்து நடக்கும் வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகளை விட விரைவாகவும் நடக்கும். மேலும் முன்னரே குறிப்பிட்டபடி, இந்த பணப் பரிவர்த்தனையானது யுபிஐ லைட் அக்கவுண்ட் வழியாகவே நடக்கும் என்பதால், இதைச் செய்ய பின் நம்பரை உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது.

அனைத்து முக்கிய வங்கிகளின் ஆதரவுடன், நாடு முழுவதும் உள்ள எந்தவொரு யுபிஐ வணிகர் அல்லது க்யூஆர் குறியீடுகள் வழியாகவும் பணம் செலுத்துவதற்கு, போன்பேவில் உள்ள யுபிஐ லைட்டை பயன்படுத்த முடியும்.

இந்த போன்பே யுபிஐ லைட்-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? போன்பே பயனர்கள் எந்த கேஒய்சி அங்கீகாரமும் இல்லாமல் யுபிஐ லைட் அம்சத்தை எளிதாக செயல்படுத்த முடியும். உங்கள் போனில் உள்ள போன்பே ஆப்பை திறந்து ஹோம் ஸ்க்ரீனில் உள்ள யுபிஐ லைட் இயக்குவதற்கான விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் யுபிஐ லைட்டில் நீங்கள் சேர்க்க விரும்பும் தொகையை உள்ளிட்டு உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை தேர்ந்தெடுக்கவும். பிறகு உங்கள் யுபிஐ பின் நம்பரை உள்ளிடவும். உங்களுக்கான யுபிஐ லைட் அக்கவுண்ட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு இருக்கும்.

யுபிஐ லைட் அக்கவுண்ட்டில் அதிகபட்சமாக 2000 ரூபாய் வரையிலான தொகையை சேர்க்க முடியும். ஒரு நேரத்தில் 200 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான தொகையை மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு நாம் நமது PIN நம்பரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. எனவே எளிதாக சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என போன்பே சில மாதங்களுக்கு முன்பே அறிவித்த நிலையில், தற்போது இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment