
ரேஷன் கடைகளில், 'க்யூஆர் கோடு' ஸ்கேன் மூலம் பணப் பரிமாற்றம் செய்து பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், பொது விநியோகத் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு பின்னர், அமைச்சர் அர.சக்கர பாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு வரும், அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை தரமானது தான் என்பதை ஆய்வு செய்ய மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளில் 14 லட்சத்து 20,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகள் தொலைந்து விட்டால், நகல் பெற வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நெட் பேங்கிங் மூலம் 45 ரூபாய் செலுத்தினால் போதும். குடும்ப அட்டையின் நகல் அவர்களின் இல்லம் தேடி அஞ்சல் வழியாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 'க்யூஆர் கோடு' ஸ்கேன் மூலம் பணப் பரிமாற்றம் செய்து பொருட்களை பெற இந்த மாதத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment