Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 1, 2023

1,105 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை

தமிழகத்தில், 1,105 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல், புதிய கல்வி ஆண்டில் பள்ளிகளை நடத்துவதற்கான நிர்வாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், 46 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இந்த பள்ளிகளில், 2.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு சமீபத்தில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1,105 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, 670 மேல்நிலை பள்ளிகளிலும், 435 உயர்நிலை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளிகளின் நிர்வாக பணிகளை மேற்கொள்வதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளை திறந்து, வரும் கல்வி ஆண்டுக்கான பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளிகளில் பணிகளை கவனிக்க, மூத்த முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியர் பதவி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், பொறுப்பு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுபவர் தனது வழக்கமான பாடம் கற்பிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

அதனால், மாணவர்களுக்கான கல்வி திறன் பாதிக்கப்படும் என, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, தலைமை ஆசிரியர்களை விரைவில் நியமித்து, நிர்வாக பணிகளை சீர்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment