இந்தியாவில் தற்போது அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல வேலைகளுக்கு ஆதார் அட்டை முதன்மை அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் தற்போது ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்ற வேண்டியவர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அதன்படி இந்தியாவில் வசிப்பவர்கள் ஜூன் 14ஆம் தேதி வரை தங்களது ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆதார் விவரங்களை புதுப்பிக்க ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற தகவல்களை அதிகாரப்பூர்வ UIDAI இணையதளம் மூலம் இலவசமாக புதுப்பிக்க முடியும். புகைப்படங்கள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க, ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று அதற்கேற்ற கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
மக்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் தங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதாரின் ஆளும் அமைப்பான UIDAI கூறியுள்ளது. மேலும் குழந்தைகளும் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இதன்படி, குழந்தைகளுக்கு 15 வயதாகும்போது, அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆதார் இணைக்கப்பட்ட ஆவணங்களின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவரங்களை புதுப்பிப்பதன் மூலம், ஆதார் தொடர்பான சேவைகளை அரசு மேம்படுத்தும்.
பயனர்கள் தேவையான ஆவணங்களை UIDAI இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்யலாம். இருப்பினும், புகைப்படங்கள், கருவிழி ஸ்கேன், கைரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகளைப் புதுப்பிக்க ஆதார் பதிவு மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு புகைப்படம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றால், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வெறுமனே பதிவேற்ற முடியாது. மையத்தில் நேரடியாக படம் பிடிக்கப்படும்.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in விசிட் செய்யவும்.
'எனது ஆதார்' என்பதை கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'உங்கள் ஆதாரைப் புதுப்பிக்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் 'ஆதார் விவரங்களை மேம்படுத்தவும் (ஆன்லைன்)' பக்கம் திறக்கும். 'ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
ஆதார் எண், கேப்ட்சா சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட்டு 'செண்ட் OTP' பொத்தானைக் கிளிக் செய்யவும்.
பதிவுசெய்யப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு, 'உள்நுழை' பொத்தானைக் கிளிக் செய்யவும்.
அடுத்த பக்கத்தில், நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுத்து புதிய விவரங்களை கவனமாக உள்ளிடவும்.
தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு, சமர்ப்பி என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
தேவையான ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றி, 'புதுப்பிப்பு கோரிக்கையைச் சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னர் அவர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணைப் (URN) பெறுவார்கள். இதன் மூலம் நிலையை கண்காணிக்க முடியும்.
புதுப்பிப்பு கோரிக்கையின் நிலையைச் சரிபார்க்க, myaadhaar.uidai.gov.in/ ஐ விசிட் செய்து 'பதிவுசெய்தல் மற்றும் புதுப்பிப்பு நிலையைச் சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment