தமிழக அரசு பள்ளிகளில், 7,000 இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 37,000 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவற்றில், 6,000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி பயிற்சி
மாநிலம் முழுதும் உள்ள, 24,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, இடைநிலை ஆசிரியர்களே விளையாட வைக்கின்றனர்.
அங்கு உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. இந்த மாணவர்களுக்கு, மாநில, தேசிய போட்டிகள் கிடையாது.
அதே நேரம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாவட்ட, மாநில மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகள் உண்டு.
இதற்காக மாணவர்களை, பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி வழியே, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும்.
இதுகுறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கரபெருமாள் கூறியதாவது:
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வாரம் இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த பாட வேளைகளை உடற்கல்வி ஆசிரியர்களால் நடத்த முடிவதில்லை.
பெயரளவுக்கு தேர்வு
கிட்டத்தட்ட, 7,000 நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கவில்லை. உடற்கல்விக்கு என்று தனியாக பாட புத்தகம் கிடையாது. பெயரளவுக்கு தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.
பள்ளிக்கல்வி இயக்குனர், செயலர் மற்றும் அமைச்சர், ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியிலும், ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உடற்கல்வி பாடங்களை உரிய முறையில் நடத்த அனுமதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment