Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 4, 2023

அனைத்து அரசு பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம் ஜூன் 9ம் தேதி நடத்த உத்தரவு

மாணவர்கள் அடுத்த வகுப்புகளில் தொடர்வதை உறுதி செய்ய அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூன் 9ம் தேதி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூன் 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்திட வேண்டும். 2023-24ம் கல்வியாண்டில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தமது படிப்பை தொடர்வதையும், அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் குழந்தைகள் தடையின்றி சேர்க்கப்படுவதையும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து பள்ளி சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளியின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் யாரேனும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேராமல் இருப்பது தெரிந்தால் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அக்குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும்.

அனைத்து வகை அரசு பள்ளிகளில் 5, 8, 10, 11ம் வகுப்பு பயின்று நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புகளில் தொடர்வதை உறுதி செய்தல் வேண்டும். துணை தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதற்கும் அம்மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாணவர்கள் தமது குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்திற்கு சென்று கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு குழந்தைகளின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி வழிகாட்டி குழுவில் பங்கு கொண்டுள்ள பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் தமது அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மறு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்ச்சி பெறாத 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தேர்ச்சி அடைந்தும் உயர்கல்வி பயிலச் செல்லாத மாணவர்கள் விபரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதித்து மாவட்ட கல்வி அலுவலர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment