Saturday, June 10, 2023

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க இயலாது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என தமிழக பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12483 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பணி நிரந்தரம், மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில் பெண் ஆசிரியைகள் உள்பட பலரும் குடும்பத்துடன் பங்கேற்றனர். போராட்டத்தின் போது பல ஆசிரியர்களின் உடல்நிலை மோசமானது. ஆசிரியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து போராட்டக் கூட்டுக் குழு பிரதிநிதிகளிடம் ஒருங்கிணைந்த கல்வி திட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும். மே மாத ஊதியம் வழங்கப்படாது என்ற அறிவிப்பால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமாருக்கு பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து செந்தில் குமார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 12 மாத ஊதியத்தையும் கேட்டு போராட்டம் நடத்தியிருந்தோம். ஆனால் தற்போது மே மாதம் ஊதியம் கிடையாது என்கிறார்கள். நாங்கள் எப்படி குடும்பம் நடத்துவது? நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் வாக்குறுதி அளித்ததால்தான் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால் தற்போது மே மாதம் ஊதியம் தரப்படாது என்ற தகவல் நிஜமாகவே எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பார்த்து எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News