Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 17, 2023

நீட் தேர்வு : தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு - எவ்வளவு தெரியுமா?

2022-23 கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 20 லட்சத்து 38 ஆயிரத்து 596 பேர் எழுதினர். இந்நிலையில் ஜூன் 13ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சுமார் 11 லட்சத்து 46 ஆயிரம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 3 லட்சம் பேர் கூடுதலாக தேர்வு எழுதியிருந்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் கூடுதலாக தேர்வாகியுள்ளனர்.

இருப்பினும் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை போல் 56 சதவீதமாகவே உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவருடன் ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தியும் முதலிடம் பிடித்தார். முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இந்தாண்டு ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களுள் 78ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2022ல் 51 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 54 சதவீதமாக அதிகரித்துள்ளது.நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 12ஆயிரத்து 997 பேரில் 3ஆயிரத்து 982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு 14ஆயிரத்து 979 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு குறைவாக 12ஆயிரத்து 997 மாணவர்கள் தேர்வை எதிர்கொண்டனர். இருப்பினும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 27 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்தாண்டு தேர்ச்சி பெற்ற 4ஆயிரத்து 118 பேரில் 461 பேருக்கு எம்பிபிஎஸ் இடமும், 106 பேருக்கு பிடிஎஸ் இடமும் கிடைத்தது. இந்தாண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment