ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு, ஆளுங்கட்சி சங்கங்கள் முட்டுக்கட்டையாக உள்ளதால், அதிலுள்ள ஆசிரியர் சங்கங்கள், இரண்டு புதிய கூட்டமைப்புகளை உருவாக்கிஉள்ளன.
கடந்த, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளுக்கு, தி.மு.க., ஆதரவு அளித்தது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், கோரிக்கைகள் நிறைவேறும் என, சங்கத்தினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.
அதே நேரம், ஜாக்டோ ஜியோவின் போராட்ட நடவடிக்கைகளுக்கு, அதில் இடம் பெற்றுள்ள ஆளுங்கட்சி சங்கத்தினர் முட்டுக்கட்டையாக உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தனி கூட்டமைப்பை ஏற்படுத்தி, 10 நாட்களுக்கு முன், மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்தனர். எனினும், கூட்டமைப்புடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி, போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் மாயவன் சார்பில், அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் சங்கங்களுக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கூறியிருப்பதாவது:
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து, வலுவான கூட்டமைப்பை உருவாக்கிஉள்ளன.
அதே போன்று, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கும் ஆசிரியர் சங்கங்களை ஒன்றிணைத்து, வலுவான கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
வரும், 21ம் தேதி சென்னையில், புதிய கூட்டமைப்பு உருவாக்குவதற்கான கூட்டம் நடத்தப்படும். இதில் சங்க நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ என்ற வலுவான கூட்டமைப்புக்கு கல்தா கொடுக்கும் வகையில், ஆசிரியர் சங்கங்கள் இணைந்து புதிய கூட்டமைப்பு உருவாக்கியிருப்பது, ஆளுங்கட்சிக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.
No comments:
Post a Comment