Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 12, 2023

தனியார் பள்ளிக்கு நிகராக.. மாறப்போகும் சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகள்..

சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரக்கு நிறம், பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் டி-ஷர்ட் வழங்கப்பட உள்ளது.

இதற்காக சென்னை மாநகராட்சி ரூ.62 லட்சத்தை ஒதுக்கி உள்ளது.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கடந்த ஆண்டு வரை 119 ஆரம்ப பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வந்தன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான மணலி, மாதவரம், திருவொற்றியூர், அம்பத்தூர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட மண்டலங்களில் 139 அரசுப் பள்ளிகளை எடுத்து நடத்த சென்னை மாநகராட்சி விரும்பியது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் வேண்டுகோள் விடுத்தது. இதன்படி சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பகுதியில் உள்ள பள்ளிகளை, மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதாவது பெருநகர சென்னை மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் (காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர்) உள்ள 790 பள்ளிகளில் சென்னையை சுற்றி இருக்கும் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி உள்ளிட்ட 139 பள்ளிகள் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இந்த கல்வியாண்டு முதல் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 'சிட்டிஸ்' மற்றும் 'சிங்காரச் சென்னை - 2.0' ஆகிய திட்டங்களின் கீழ், சென்னை மாநகராட்சி பள்ளிகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படுகின்றன. 200 கோடி ரூபாய் செலவில் 'சிட்டிஸ்' என்ற திட்டத்தின் கீழ் 28 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் உருவாக்கப்பட்ட உள்ளன, அதேபோல் பள்ளியில் உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. புதிய கட்டடங்கள் கட்டுதல், இணையதள வசதியுடன் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் உருவாக்கப்பட உள்ளது. பள்ளி முழுதும் 'வை - பை' வசதி, 'வெஸ்டன் டாய்லெட்' வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது

இது ஒருபுறம் எனில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி , நீட், ஜேஇஇ, கிளாட் போன்ற போட்டி தேர்வுகள் மூலம் வெல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சியே ஏற்கும். சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் 'ஸ்நாக்ஸ்' வழங்கப்படும் . சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். மாலைநேர வகுப்புகளில் பங்கேற்கும் 10 (ம) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவித்த சுண்டல், பயறு வகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னையில் 10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உள்ள அனைத்து பள்ளிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் மாதிரி ஐ.நா.சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் தனியார் பள்ளிகளைப் போல சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, 4 வண்ணங்களில் வண்ண டி-ஷர்ட் வழங்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தமுள்ள 81 பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக 4 குழுக்களாகப் பிரித்து, அவற்றுக்கு அரக்கு, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் டி-ஷர்ட் கொள்முதல் செய்து வழங்கப்பட உள்ளது.


இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம், மொத்தம் உள்ள 81 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துள்ளது. அதன்படி தற்போது 29 ஆயிரத்து 258 பேர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு டி-ஷர்ட் வாங்க ரூ.62 லட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இம்மாணவர்களுக்கான டி-ஷர்ட் வழங்கும் ஆர்டர், தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மாணவர்களுக்கு வண்ண டி-ஷர்ட் வழங்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment