தெற்கு ரயில்வேயில் ஹால்ட் ரயில் நிலையங்களில் (கிராமப்புறங்களில் உள்ள ரயில் நிலையங்கள்) யுடிஎஸ் செல்போன் செயலி மூலமாக, காகிதமில்லாத டிக்கெட் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையங்களுக்கு உள்ளே நுழைவதற்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்து, ரயிலில் பயணிக்க முடியும்.
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யுடிஎஸ் செல்போன் செயலி தெற்கு ரயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து பயணிக்க வசதியாக, யுடிஎஸ் செல்போன் செயலி தொடங்கப்பட்டது.
ஸ்மார்ட் போனில் இதை பதிவிறக்கம் செய்து, முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பதற்காக, இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. இருப்பினும், ரயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே, இந்த செயலியை பயன்படுத்தி, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க முடியும். இதை விரிவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் ஹால்ட் நிலையங்களில் யுடிஎஸ் செல்போன் செயலியை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரயில் நிலையம். இங்கு ரயில் டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் வழங்குவார்கள். தற்போது, யுடிஎஸ் செல்போன் செயலி மூலமாக பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்த நிலையங்களில் முகவர்கள் மூலமாக முன்பதிவில்லாத டிக்கெட் கொடுக்கப்படும். தற்போது, யுடிஎஸ் செல்போன் செயலி மூலமாக டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இந்த நிலையங்கள் அருகே வசிக்கும் ரயில் பயணிகள் பயனடைவார்கள். இந்த செயலி மூலமாக, சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட் ஆகியவற்றை பெறலாம்.
யுடிஎஸ் செல்போன் செயலி மூலம் டிக்கெட்டுகளை பதிவுசெய்து, பதிவிறக்கம் செய்வதற்கான செயல்முறை, பயன்பாட்டுக்கான பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். இவ்வாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment