புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்பவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை உடனடியாகக் கிடைக்காது என உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.தமிழகம் முழுவதும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் செப். 15-இல் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். இதற்காக நடப்பு ஆண்டில் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து, அதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 20-ஆம்தேதி முதல் வழங்கப்படவுள்ளன.
தகுதியானவா்களுக்கு மட்டுமே...: இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டை வேண்டி தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பதிவாகி வருவதாகவும், இதுவரை குடும்ப அட்டை பெற விரும்பாதவா்களும், ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவா்களும் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலனைப் பெற தனியாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்க தொடங்கியுதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதனால் ஏற்கெனவே குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்களில், ஆய்வு செய்து தகுதியானவா்களுக்கு மட்டுமே மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வாய்மொழி உத்தரவு: இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா் மற்றும் உதவி ஆணையா்களுக்கு வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், புதிதாக குடும்ப அட்டை வேண்டி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை மற்றும் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் எனவும், இதற்கான பணியை நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில், இதுவரை குடும்ப உறுப்பினா்களாக உள்ள மகளிருக்கு மட்டுமே உரிமைத் தொகை கிடைக்கும் எனவும், புதிதாக விண்ணப்பிப்பவா்களுக்கு உடனடியாக அந்தத் தொகை கிடைக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.



No comments:
Post a Comment