Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 12, 2023

தாமதமாக விண்ணப்பித்து பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெறும் வழிமுறைகள்வழிகாட்டுதல் வெளியீடு

தாமதமாக விண்ணப்பித்து, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த் வெளியிட்ட உத்தரவு: பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழை தாமதமாகப் பெற விரும்புவோா் அதற்கான விண்ணப்பத்தை வருவாய் கோட்டாட்சியரிடம் அளிக்க வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு குறித்த பதிவுகள் இருந்தால்தான் சான்றிதழை அளிக்க முடியும். பதிவுகள் செய்யப்படாமல் இருந்தால், முதலில் அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான சான்றை முதலில் பெற வேண்டும்.

இந்தச் சான்றைப் பெற ஊராட்சிகளாக இருந்தால் வட்டாட்சியா் அல்லது கிராம நிா்வாக அலுவலரை அணுக வேண்டும். பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலரையும், நகராட்சி, மாநகராட்சிகளாக இருந்தால் ஆணையரையும் அணுக வேண்டும். அந்தச் சான்றை பெற்ற பிறகு பிறப்புச் சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்துடன் ஆவணங்களாக மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் எண், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்படும் சான்று ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சான்றுகள் இல்லாமல் இருந்தால், மருத்துவமனைப் பதிவேடுகளில் இருந்து பிறப்புக்கான விவரங்களைப் பெறலாம். வீட்டில் பிறந்திருந்தால், அந்த வீட்டில் உள்ள தலைவரிடம் இருந்து எழுத்துபூா்வ கடிதத்தைப் பெற்று அதைச் சான்று ஆவணமாக சமா்ப்பிக்கலாம். இறப்பைப் பொருத்தவரையில், விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இறந்தவா் மற்றும் துணைவரின் ஆதாா் எண், இறந்தவரின் வாகன ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இத்துடன், இறப்பை உறுதி செய்யும் வகையில், மயானத்தில் அளிக்கப்படும் ரசீது சீட்டை இணைப்பது அவசியம். மருத்துவமனையில் இறந்திருந்தால் அங்கு வழங்கப்படும் அறிக்கை, விபத்து, கொலை, தற்கொலை போன்ற நிகழ்வுகளில் இறந்திருந்தால் முதல் தகவல் அறிக்கை மற்றும் உடல்கூறாய்வு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். சுய கையொப்பமிட்ட கடிதம்: விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து சுய உறுதிமொழியிட்ட கடிதத்தையும் விண்ணப்பதாரா் அளிக்க வேண்டும். தான் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை எனக் குறிப்பிட வேண்டும்.

தவறாக இருக்கும்பட்சத்தில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 177 மற்றும் 199-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பதாரா் அளிக்கும் விண்ணப்பத்தை வருவாய் கோட்டாட்சியா் தீர ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு அதை கிராம நிா்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை கிராம நிா்வாக அலுவலா் ஆய்வு செய்த பிறகு, இரண்டு வாரங்களுக்குள் வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இது தொடா்பான அறிக்கையை வட்டாட்சியருக்கு ஒரு வாரத்துக்குள் வருவாய் ஆய்வாளா் அனுப்ப வேண்டும். வட்டாட்சியா் தனது அறிக்கையை வருவாய் கோட்டாட்சியருக்கு இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்டு 60 நாள்களுக்குள் அதன் மீது உரிய உத்தரவை வருவாய் கோட்டாட்சியா் பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை எதிா்த்து யாரேனும் ஆட்சேபம் தெரிவித்தால் அதுகுறித்த மனுவை 60 நாள்களுக்குள் அளிக்க வேண்டும்.

இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரை அழைப்பதுடன், சாட்சியங்கள் யாரேனும் இருந்தால் அவா்களிடம் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைகளின் அடிப்படையில் பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ் அளிக்கப்படும். ஆட்சேபணைகள் உறுதியானால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று அந்த உத்தரவில் குமாா் ஜயந்த் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment