சென்னை படூரில் செயல்படும் இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மையத்தில் (ஹிட்ஸ்) இந்திய பார்மசூட்டிகள் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற 4 ஆண்டு இளநிலை மருந்தியல் பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய படிப்பு தொடக்க விழாவில் தேசிய பார்மசூட்டிகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் வி.ரவிச்சந்திரன் தலைமை விருந்தினராகவும், ஜோகோ ஹெல்த் நிறுவன பொது மேலாளர் சார்லஸ் ஜேசுதாசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். ‘ஹிட்ஸ்’ வேந்தர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், இணை வேந்தர் அசோக் வர்கீஸ், துணைவேந்தர் எஸ்.என்.ஸ்ரீதரா, ஆர்.டபிள்யு. அலெக்சாண்டர் ஜேசுதாசன் மற்றும் ஹிட்ஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மருந்தியல் இளநிலை படிப்பில் மருந்துப் பொருட்கள் தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப விவரங்கள் மட்டுமின்றி விற்பனை, புதிய மருந்துகளுக்கு காப்புரிமை பெறுதல் ஆகியவை குறித்தும் போதிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர் வி.ரவிச்சந்திரன் பேசும்போது, “உலக அளவில் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய மையமாக இந்தியா விளங்கிவரும் நிலையில், இதுபோன்ற பட்டப் படிப்பைத் தொடங்குவது சரியான செயலாகும். இந்தியா மருத்துவத் துறையில் மிகச்சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இத்துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் அவசியம்” என்று கூறினார்.
பல்கலை. வேந்தர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் பேசும்போது, “புதிய படிப்பில் சேர மாணவர்களை அழைக்கிறேன். இந்தியாவில் சுகாதாரத் துறைக்கு நிலையான எதிர்காலம் உள்ளது. இத்துறையில் 50 பில்லியன் டாலர் வருவாய் வளர்ச்சியை முன்மொழிந்துள்ள நிலையில், 2024-ல் 65 பில்லியன் மற்றும் 2030-ல் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
No comments:
Post a Comment