Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 27, 2023

தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் அறிவிப்பு

Add This Number In Your Whatsapp Groups -6379884356
தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "அனைத்து அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும்.

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடே வியக்கும் வண்ணம் பொருளாதார வளர்ச்சியை அடைந்தது மட்டுமின்றி குறிப்பிடத்தக்க அந்நிய முதலீடுகளையும் தமிழ்நாடு ஈர்த்து வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், 2022-23ம் ஆண்டுக்கான போனஸ் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

> அதன்படி, இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக் கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

> தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

> நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

> தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

> இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8,400ம் அதிகபட்சம் ரூ.16,800ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 83 ஆயிரத்து 787 தொழிலாளர்களுக்கு 402 கோடியே 97 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும். இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர் வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed