தமிழ்நாட்டில் நாளை வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே (அக்.21) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வெள்ளிக்கிழமை உருவாகியுள்ளது. இது மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நாளை மறுநாள் (அக். 23) வலுப்பெறக்கூடும்.
மேலும், குமரிக் கடல், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும். வடகிழக்குப் பருவமழை தொடக்க நிலையில் வலு குறைந்து காணப்படும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வியாழன் (அக்.26) வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்ட ஒரு நாள் முன்னதாகவே இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், அமைந்தக்கரை, அயனாவரம், எழும்பூர், மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், மாதவரம் பல்லாவரம், ஆலந்தூர், குன்றத்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது.
No comments:
Post a Comment