Thursday, October 26, 2023

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க காவல் ஆணையர் ஏற்பாடு: அரசு பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி

அரசுப் பள்ளி, மாணவ மாணவிகளை கிரிக்கெட் போட்டி பார்க்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்பாடு செய்தார். தங்களின் வாழ்நாளில் முதல் முறையாகப் போட்டியை நேரில் ரசித்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்தனர்.

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் நேரில் சென்று ரசித்தனர்.

இதேபோல், சென்னை பெருநகர் முழுவதிலுமிருந்து காவல் துறையால் நிர்வகிக்கப்படும் காவல் சிறார், சிறுமியர் மன்றத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த போட்டியை இலவசமாக நேரில் சென்று ரசிக்கச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்பாடு செய்தார்.

அதோடு மட்டும் அல்லாமல் சென்னை மேற்கு மண்டல, காவல் இணை ஆணையர் மனோகரன் தலைமையிலான போலீஸார் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை போட்டி நடைபெற்ற கிரிக்கெட் மைதானத்துக்கு வாகனம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். மேலும் டி-ஷர்ட் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி அவர்கள் உற்சாகமாக போட்டியைக் கண்டு களிக்க ஏற்பாடு செய்தார்.

முதல் முறையாகப் போட்டியை நேரடியாகப் பார்த்து ரசித்து விட்டு வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் இந்த நிகழ்வு தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News