Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 22, 2023

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி.. சாமி கும்பிட நல்ல நேரம்.. தொழில் வளம் பெருகும்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி நாட்களில் சாமி கும்பிட நல்ல நேரம் எப்போது என்று ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.

ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனது முகநூல் பக்கத்தில் நல்ல நேரம் குறித்து பதிவிட்டுள்ளார்.

நவராத்திரி: நவராத்திரியின் முதல் மூன்று நாட்களின் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் இந்த மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.

ஆயுதபூஜை: நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கின்றன. இதை நினைவுபடுத்தும் விதமாகவே சரஸ்வதி பூஜை அன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும், நம்முடைய வாழ்விற்கு ஆதாரமாக திகழும் பொருட்களை வைத்து கொண்டாடுகிறோம்.

விஜயதசமி: நவராத்திரி விழாவின் நிறைவாக பத்தாவது நாளில் அம்பிகை மகிஷனை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். அந்த தொழிலை வணங்க வேண்டிய தினம் தான் ஆயுதபூஜை. பூஜையறையில் புத்தங்கள், பேனாக்கள் வைத்து பொட்டுவைத்து அலங்கரிக்கவும்.மேலும் வீட்டு உபயோகக் கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி, அரிவாள் போன்றவற்றிலும் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

தொழில் வளம் சிறக்க பூஜை: தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலுக்குரிய இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். நீங்கள் எந்த தொழில் செய்பவராக இருந்தால் அதற்கு உதவும் கருவி அல்லது பொருளை சுத்தம் செய்து சந்தனப் பொட்டு, குங்கும பொட்டு வைத்து பூ வைத்து வணங்க வேண்டும். பஸ், லாரி, ஆட்டோ ஓட்டுபவர்கள் உங்கள் வாகனத்தில் சந்தனத்தை கரைத்து வாகனம் முழுவதும் தெளிக்கலாம்.

மாவிலை தோரணங்கள்: வீடு வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து திருநீறில் பட்டை போட்டு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பின்பு மாவிலை தோரணம் கட்ட வேண்டும். தற்போது பெரும்பாலானோர் மாவிலை கிடைக்காததால் பிளாஸ்டிக் மாவிலையை கடையில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

எப்படி பூஜை செய்வது: பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு முன்பு வினை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும். பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து, அருகம்புல் ஆகியவை வைத்து வழிபட்ட பின்பு தான் கல்வி கற்பதில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

நைவேத்தியம்: பூஜை செய்வதற்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை பாயாசம் மற்றும் பல வகையான பழங்களை வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். எங்கெல்லாம் பூஜை செய்தீர்களோ மணியடித்து நீரினால் மூன்றுமுறைச்சுற்றி நிவேதனம் செய்து விட்டு புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கும் நிவேதனம் செய்யவும். பிறகு சூடம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபடவும். விபூதி, குங்குமம் மற்று பொரிக்கடலை ஆகியவற்றை எல்லாருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்யவும்

ல்ல நேரம் எப்போது: ஆயுதங்களுக்கு பூஜை செய்வதற்குரிய முகூர்த்த நேரமாக அக்டோபர் 23 ம் தேதி பகல் 12.30 முதல் 2 மணி வரை நல்ல நேரமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை செய்ய மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நல்ல நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 24 ம் தேதி விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக காலை: 07.45 முதல் 08.45 மணி வரையிலும் காலை: 10.45 முதல் 11.45 மணி வரையிலும் சாமி கும்பிடலாம்.

சரஸ்வதி பூஜை: ஜோதிடர் பாலாஜிஹாசன் தனது முகநூல் பக்கத்தில் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை செய்வதற்கான நல்ல நேரங்களை பதிவிட்டுள்ளார். அக்டோபர் 23ஆம் தேதி ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம் மதியம் 12.15 முதல் 2.15 மணி வரை திருவோண நட்சத்திரம் மூன்றாம் பாதம் தனுசு லக்கினத்திற்கு ஐந்தில் குரு பகவான் பார்வையுடன் லக்கனத்திற்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் புதன் சூரியன் என்கின்ற நல்ல அமைப்புடன் கூடிய நேரம் சிறப்பானது.

அதே போல 23ஆம் தேதி மாலை 6. 10 மணி முதல் 7.30 மணி வரை அவிட்டம் நட்சத்திரம் மேஷ லக்னத்தில் குருபகவானும் லக்கினத்திற்கு ஐந்தில் சுக்கிரனும் லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் சனி பகவானும் லக்கினத்திற்கு ஏழில் சூரியன் செவ்வாய் புதன் என்கின்ற அற்புதமான நல்ல நேரத்தில் பூஜை செய்யலாம் என்று பாலாஜி ஹாசன் பதிவிட்டுள்ளார்.

தொழில் மேன்மை அடையும்: தங்களது அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், உற்பத்தி சாலைகள், வியாபார கடைகள், வீட்டில் தெய்வப் படங்களுக்கு பொரி, கொண்டக்கடலை சுண்டல் வைத்து உங்கள் வரவு / செலவு புத்தகங்கள், மற்றும் உங்கள் தொழிலுக்கு மூலதனமாக இருக்கக்கூடிய உபயோகப் பொருட்களை , தங்களது வாகனங்கள் வைத்து பூஜை செய்து வருவதால் தொழில் மிக மேன்மை அடைந்து மிகச் சிறப்பு பெறும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாலாஜி ஹாசன். நிச்சயமாக இது அற்புதமான லக்கனங்கள் எனவே இந்த நேரத்தில் நீங்கள் பூஜை செய்து பயன்பெற வேண்டும் என்றும் பாலாஜிஹாசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News