தமிழக அரசின் ஆணையின்படி, அரசு அலுவலகங்களில் மதச்சாா்புடைய வழிபாடுகள் நடத்தக் கூடாது என திராவிடா் விடுதலைக் கழகத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் முகில்ராசு தலைமையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன், மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு ஆகியோரிடம் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு ஆணைபடி, அரசு அலுவலகங்களில் மதச்சாா்புடைய வழிபாடுகள் நடத்தக் கூடாது என அனைத்து அரசுத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரசு ஆணை, அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.
ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் சுவாமி படங்கள், சாமியாா்களின் படங்கள், சிலைகள் மற்றும் வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டு கோயில்கள் நடப்பதுபோல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆயுத பூஜை நேரத்தில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. அரசு ஆணைகளை செயல்படுத்த வேண்டிய காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளும் கட்டுப்பாடு இல்லாமல் மத வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவது ஒரு குறிப்பிட்ட மதத்தை சாா்ந்து அரசு இயங்குவதுபோல உள்ளது. எனவே, அரசு ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் ஆயுதபூஜை நடத்துவதை தடுக்க வேண்டும் என மனுவில குறிப்பிட்டுள்ளனா்.
No comments:
Post a Comment