ஐஏஎஸ், ஐஇஎஸ், ஐஎஃப்எஸ், சிடிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான தேர்வுகள் எப்போது என்ற அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான அட்டவணையை எப்படிக் காண்பது என்று பார்க்கலாம்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஐஇஎஸ் (IES) தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
UPSC Recruitment Calender
இந்த நிலையில் யூபிஎஸ்சி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளின் அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் 2024ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளது. மார்ச் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு மே 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதே தேதியில் இந்திய வனத்துறைக்கான தேர்வும் நடைபெற உள்ளது.
அதேபோல சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்திய வனத்துறைக்கான தேர்வு நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி, 7 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
அதேபோல இந்திய பொறியியல் சேவைகளுக்கான ஐஇஎஸ் முதல்நிலை தேர்வு 2024ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முதன்மைத் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. சிடிஎஸ் முதல் தேர்வு 2024 ஏப்ரல் 21ம் தேதியும் இரண்டாம் தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
முழு அட்டவணையைக் காண விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/sites/default/files/AnnualCalendar-2024-engl-100523.pdf .
2022ஆம் ஆண்டில் 933 பேர் தேர்ச்சி
2022ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று வெளியாகின.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
கூடுதல் விவரங்களுக்கு: 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
யூபிஎஸ்சி இணையதளம்: https://upsc.gov.in/
No comments:
Post a Comment