Thursday, November 16, 2023

மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள்:2025-26 முதல் நடைமுறைப்படுத்த முடிவு


மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை வரும் 2025-26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம். அதற்காக ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்து வருகின்றன. இந்நிலையில், எம்பிபிஎஸ் இடங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய நெறிமுறைகளை என்எம்சி அண்மையில் வெளியிட்டது.

அதில் அதிகபட்சம் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே இனிமேல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் வீதம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களும் எதிா்ப்பு தெரிவித்தன. கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே, புதிய விதிகளை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை சாா்பிலும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், என்எம்சி இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் தலைவா் அருணா வானிக்கா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்களை அனுமதிக்கும் புதிய வழிகாட்டி விதிமுறைகள் வரும் 2025-26-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News