Monday, November 20, 2023

22, 23, 24 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.

தமிழ்நாட்டில் வரும் 22, 23, 24 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக அனேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இவற்றின் காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் வரும் 22, 23, 24 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இந்த 3 நாட்களுக்கு 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மதியம் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, ராமநாதபுரத்தில் மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சாத்தான்குளம் 12 செ.மீ., திருச்செந்தூரில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News