Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 13, 2023

ஆசிரியர் ஒற்றர்கள் ; கல்வித்துறையில் அலறும் சங்கங்கள் ' நெருக்கடி டெக்னிக் '

Add This Number In Your Whatsapp Groups -6379884356
கல்வித்துறையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் சங்கங்களை உடைத்து ஆதரவு சங்கங்களாக மாற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மாநில அளவில் அரசு, உதவிபெறும் தொடக்க, உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு என 50க்கும் மேற்பட்ட சங்கங்கள் இருந்தாலும் 15 சங்கங்கள் மட்டும் 'ஆக்டிவ் 'ஆக செயல்படுகின்றன. இவற்றில் 2.50 லட்சம் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கங்கள் அவ்வப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன.

குறிப்பாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கம், டி.இ.டி., தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் அமைப்புகள், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்கங்களும் என ஒட்டுமொத்தமாக அக். 28ல் போராட்டத்தில் இறங்கின.

ஒன்பது நாட்கள் தொடர்ந்த அந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்தது சர்சையை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.

'நடவடிக்கை எடுங்கள் ஸ்டாலின் தாத்தா...' என ஆசிரியர்களின் குழந்தைகள் பேசி வெளியான வீடியோ வேண்டுகோள் வைரலாகி ஆளும் கட்சியை அதிர்ச்சியுற வைத்தது.

இதன் எதிரொலியாக சங்கங்களுடன் சரியாக பேச்சு நடத்தி போராட்டங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தால் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா இடமாற்றம் செய்யப்பட்டார்.

கல்வித்துறை அமைச்சரான மகேஷூக்கும் இது கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. கல்வித்துறைச் செயலாளராக குமரகுருபரன் பொறுப்பேற்ற பின் சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தைசுமுகமாகியது. நிர்வாகிகள் எளிதில் அணுகும் நிலை ஏற்பட்டது.

ஆசிரியர் ஒற்றர்கள்

இருப்பினும் கோரிக்கைகளுக்கான தீர்வில் முன்னேற்றம் இல்லை. அதேநேரம் கோரிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த முன்னெடுக்கும் 'ஆக்டிவ்' ஆசிரியர் சங்கங்களுக்கு 'செக்' வைக்கும் திட்டங்களும் தயாராகின. ஏற்கனவே தி.மு.க., விசுவாச சங்கங்கள் உள்ள நிலையில், 'ஆக்டிவ்' சங்கங்களில் அதன் செயல்பாடுகளை ஊடுருவி கண்காணிக்கும் 'ஆசிரிய ஒற்றர்களை' அதிகாரிகள் பலப்படுத்தி வருகின்றனர்.

முக்கிய சங்கங்களுடன் இந்த 'ஆசிரிய ஒற்றர்'களை களத்தில் இறக்கிவிட்டு அவற்றின் போராட்டமுடிவுகள் முன்கூட்டியே கணிக்கப்படுகின்றன.

இதன் எதிரொலியாக பல்வேறு சங்கங்கள் இணைந்த ஒரு கூட்டமைப்பு சமீபத்தில் நடத்த இருந்த போராட்டம் கடைசி நேரத்தில் விளக்க கூட்டமாக மாற்றி பிசுபிசுக்க வைக்கப்பட்ட பின்னணியில் இந்த 'ஆசிரிய ஒற்றர்கள்' பங்கு அதிகம் இருந்தன.

மேலும் 20 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் சங்கம் ஒன்றின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒற்றர்கள் மூலம் வலை விரித்து சங்கத்தை உடைக்கும் முயற்சியும் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

நிர்வாகிகள் கூறியதாவது: அரசு அளித்த வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்ற கோரி போராடுகிறோம். ஆனால் எங்கள் கைகளை வைத்தே எங்கள் கண்களை குத்தி பலவீனப்படுத்தும் கல்வித்துறையின் இந்த 'நெருக்கடி டெக்னிக்' அதிர்ச்சியளிக்கிறது.

ஆசிரியர்களை கற்பிக்கும் பணிக்கு தயார்படுத்தாமல் இப்படி ஒற்றர் வேலை பார்க்க ஊக்கப்படுத்துவது தவறான செயல். அவர்கள் அமைச்சர், உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி மாவட்ட அதிகாரிகளை மிரட்டி இத்துறையை தான் பலவீனப்படுத்துகின்றனர் என்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed